சினிமா

'குட் நைட்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

'குட் நைட்' பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'குட் நைட்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
Sivakarthikeyan and Vinayak Chandrasekaran
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான 'அமரன்' படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.340 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இதனைத்தொடர்ந்து அவர், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடைபெற்றன. இந்த படத்தில், அதர்வா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விசாவில் வெங்கட் பிரபு வெளியிட்டார். முன்னதாக வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் வெளியான 'தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் நடித்த 'குட் நைட்' திரைப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'குட் நைட்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நல்ல எதார்த்தமான கதைக்களத்தில் காண முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.