சினிமா

இட்லியில் உப்புமா செய்வாங்கனு தெரியாது.. நடிகை தேவயானி ஓபன் டாக்!

சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெறும் இட்லி உப்புமா காட்சி அனைவரது பேவரைட் லிஸ்டில் ஒன்று. ஆனால், அப்படத்தில் நடிக்கும் வரை இட்லியில் உப்புமா செய்வார்கள் என்பதே தேவயானிக்கு தெரியாதாம்.

இட்லியில் உப்புமா செய்வாங்கனு தெரியாது.. நடிகை தேவயானி ஓபன் டாக்!
Actress Devayani interview
நடிகை தேவயானியின் நடிப்பாற்றலை குறித்து பேச காதல் கோட்டை, சூரியவம்சம், ப்ரெண்ட்ஸ்,தெனாலி என லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். இதனிடையே சிவா ஆறுமுகம் இயக்கத்தில் வெளியாகியுள்ள நிழற்குடை திரைப்படத்தில் நடித்துள்ள தேவயானி குமுதம் இதழுக்காக சிறப்பு நேர்காணலை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

சமீபத்தில் விழா ஒன்றில் நீங்களும் ரம்பாவும் சந்தித்தீர்கள். இருவரும் என்ன பேசிக் கொண்டீர்கள்?

“முன்பு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வோம். அவர் கனடாவில் குடியேறிய பிறகு, சந்தித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், நானும் ரம்பாவும் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோம். நீண்ட காலங்கள் கழித்து இப்போதுதான் சந்தித்தோம். குடும்பம், நண்பர்கள், விஷயங்கள், சினிமா செய்திகள் என்று பல விஷயங்களைப் பேசினோம். எப்போதும் ரம்பா விடம் மனம்விட்டுப் பேசலாம்."

இட்லி உப்புமா அனுபவத்தை சொல்லுங்களேன்..?

"அதை நீங்கள் விக்ரமன் சாரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அந்த உணவு புதியது. அந்தக் காட்சிக்கு முன்பு வரை இட்லியில் உப்புமா செய்வார்கள் என்பதே எனக்குத் தெரியாது. விக்ரமன் சார் வீட்டில் அடிக்கடி செய்வார்களாம். அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அந்தக் காட்சியில் வசதியாக வாழ்ந்த ஒரு பெண் கணவருடன் சாதாரண வீட்டில் வசிக்கிறார். வாழ்வது வேறு வசிப்பது வேறல்லவா? அந்த வீட்டுக்குத் திடீரென தன்னுடைய அப்பா வரும்போது கணவரின் கௌரவம் குறையாமல் இருக்கவும், தான் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று அப்பாவிடம் பெருமையாக காட்டிக்கொள்ளவும் முயற்சிப்பாள் நாயகி. அதைப் பார்த்துவிட்டு அப்பாவும் சந்தோஷமாக திரும்பிச் செல்வார். இதுபோன்ற அம்சங்கள்தான் அப்படத்தின் வெற்றிக்குக் காரணம்."

சமீபத்தில் சிம்ரன், 'நாங்கள் இதுபோன்ற கதாபாத்திரங்களைப் பண்ணும்போது, தேவயானி ஆன்ட்டி கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார்' என்று கூறினார். அது பற்றி?

"நான் எப்போதும் எனக்கு என்ன வருமோ, எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதைத்தான் செய்கிறேன். அன்று அப்படி எல்லாம் நடித்தோமே... அதைப் போலவே இன்றும் அப்படித்தான் நடிப்பேன் என்று நான் யோசிக்க மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, எப்போதும் நேர்மறையான பாத்திரங்களில் மட்டும்தான் தேவயானி நடிப்பாள்."

(நேர்காணல்/கட்டுரை: நிதிஷ் அதியமான்)

(நேர்காணல் குறித்த முழுத்தகவலுக்கு குமுதம் இதழினை இன்றே வாங்கி படியுங்கள் அல்லது குமுதம் இதழ்களை ஆன்லைன் சப்ஸ்கிரைப் செய்து பயனடையுங்கள்)