சினிமா

‘லக்கி பாஸ்கர் 2’.. இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

‘லக்கி பாஸ்கர் 2’.. இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!
Venky Atluri about 'Lucky Bhaskar' Part 2
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் ரூ.111 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படம் துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோரின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரியிடம், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2 ஆம் பாகத்துக்கான யோசனை இருக்கிறது. அது நடக்கும். ஆனால், நானும், துல்கர் சல்மானும் தபோதையா படங்களை பிசியாக பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.

‘லக்கி பாஸ்கர் 2’ படம் உருவாகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி உறுதிப்படுத்தியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் சூர்யாவின் 46-வது படம் முடிந்த பிறகு, இந்த படத்துக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.