சினிமா

"அரசியலில் என் பெயரை இழுக்காதீர்கள்"- நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்!

தவெக தலைவர் விஜயுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Actress trisha
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "திரிஷாவிடம் இருந்து வெளியில் வந்தால்தான் விஜய்க்கு எல்லாமே நடக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். தனிநபர் வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் இதற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கண்ணியமற்ற பேச்சு: வழக்கறிஞர் அறிக்கை

திரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களில் திரிஷா குறித்துப் பரவி வரும் அருவருப்பான கருத்துகள் மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மாநில அரசியலில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர், இத்தகைய கண்ணியமற்ற கருத்தைச் சொல்லுவார் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் பெயரையும், தனிப்பட்ட வாழ்வையும் பொது விவாதப் பொருளாக மாற்றுவது முறையல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தொடர்பும் நடுநிலைப்பாடும்

திரிஷா எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்பதையும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் எப்போதும் அரசியலில் ஒரு நடுநிலைத் தன்மையையே கடைபிடித்து வருகிறார் என்றும், தனது கலை மற்றும் நடிப்புத் திறமைக்காக மட்டுமே அவர் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

உயரிய பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்குத் திரிஷா தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத அரசியல் விவகாரங்களில், தேவையின்றித் தனது பெயரை இழுக்க வேண்டாம் என்றும் திரிஷாவின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.