சினிமா

குடும்பப் பிரச்சனை: 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

குடும்பப் பிரச்சனை: 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை!
Serial actress Suicide
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

சென்னை பிராட்வே, தாயப்பன் முதலி தெருவைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் குமார் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர். கணவர் சதீஷ் ஒரு தனியார் எண்ணெய் கம்பெனியில் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

தாய் வீட்டில் விபரீத முடிவு

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி அன்று கணவர் சதீஷ்க்கும், நடிகை ராஜேஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சனை காரணமாகத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, மறுநாள் காலை நடிகை ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு, சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி, நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாத்திரைகளைச் சாப்பிட்ட சில நிமிடங்களில் நடிகை ராஜேஸ்வரி மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டுச் சிகிச்சைக்காக முதலில் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ராஜேஸ்வரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.