சினிமா

'கும்கி 2' படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

'கும்கி 2' படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Interim stay on the release of the film Kumki 2
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தராத காரணத்தினால், நிதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டதன் முழு விவரம்

'கும்கி 2' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக, இயக்குநர் பிரபு சாலமன், 2018ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். படத்தை வெளியிடுவதற்குள் இந்தக் கடனை வட்டியுடன் சேர்த்துத் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வட்டியுடன் சேர்த்து ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாயைத் திருப்பித் தராமல், நவம்பர் 14ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர் என்று சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சந்திரபிரகாஷ் ஜெயின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

'கும்கி 2' திரைப்படத்தின் பின்னணி

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' திரைப்படம் 2012ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்கக் காடுகளுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.