சினிமா

'ஜனநாயகன்' பட விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜனநாயகன் படத்தை கேபில் டிவி மற்றும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'ஜனநாயகன்' பட விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
JanaNayagan
தணிக்கை விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானதை அடுத்து, அதனை இணையத்தில் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், படத்தில் ராணுவம் மற்றும் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, தணிக்கை வாரியம் இதனை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது. இது தொடர்பான சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழே கிடைக்காத சூழலில், படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்தது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தயாரிப்பு நிறுவனத்தின் சட்டப் போராட்டம்

படம் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படம் வெளியாவது தங்களுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பு நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவிகளிலோ சட்டவிரோதமாக வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக இணையதளச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.