சினிமா

என்ன மிரட்டுறாரு வடிவேலு.. வெளியானது மாரீசன் படத்தின் டீசர்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன மிரட்டுறாரு வடிவேலு.. வெளியானது மாரீசன் படத்தின் டீசர்
maareesan movie teaser Released
மாமன்னன் படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்த வடிவேலு- பஹத் பாசில், மாரீசன் படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள் என்று அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.

மிக நீண்ட நாட்களாக நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில், தற்போது படத்தினை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது படத்தயாரிப்புக்குழு. அந்த வகையில், இன்றைய தினம் மாரீசன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், உணர்ச்சி பொங்கும் எமோஷனல் நிறைந்த கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுப்பார் என்பது ஊர் அறிந்ததே. தனது இரண்டாவது இன்னிங்ஸில் மாமன்னன் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில், வடிவேலுவினை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளது மாரீசன் திரைப்படத்தின் டீசர்.

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? என வழக்கம் போல டீசரில் கண் அசைவில் கூட க்ளாப்ஸ் அள்ளுகிறார் மலையாள நடிகர் பஹத் பாசில். பழைய பாடல் ஒன்றுடன் தொடங்கும் டீசர், ஒரு த்ரில்லரை நோக்கி முடிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்பினை நிச்சயம் மாரீசன் படத்தின் டீசர் இரட்டிப்பாகியுள்ளது என்றால் மிகையல்ல.

படக்குழு விவரம்:

வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோருடன், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் E4experiments LLP இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரீசன்' திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை வி. கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார், இவரே கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், அவரது இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை ரசிகர்களின் பாரட்டை பெற்றுள்ளது.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பைக் கையாள்கிறார். சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு வடிவமைக்க, லவன் & குஷான் (டிஜிட்டல் டர்போ மீடியா) விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கின்றனர். படத்தின் பாடல்களை மதன் கார்க்கி மற்றும் சபரவாசன் சண்முகம் எழுதியுள்ளனர்.



'மாமன்னன்' திரைப்படத்திற்குப் பிறகு வடிவேலுவின் அடுத்த முக்கியமான படமாக 'மாரீசன்' பார்க்கப்படுகிறது. வடிவேலு மற்றும் பஹத் பாசிலை ஒரே திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் திரை வெளியீட்டு தேதிகள் குறித்த அப்டேட் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.