சினிமா

லெனின் பாண்டியன் ஃபர்ஸ்ட் லுக்- கங்கை அமரனுடன் களமிறங்கும் சிவாஜி பேரன்!

லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் சிவாஜியின் பேரன் தர்ஷன்.

லெனின் பாண்டியன் ஃபர்ஸ்ட் லுக்- கங்கை அமரனுடன் களமிறங்கும் சிவாஜி பேரன்!
Sivaji's Grandson Darshan Debuts in Lenin Pandian alongside Gangai Amaran
இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ”லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கங்கை அமரனுடன், சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடித்துள்ளார். சிவாஜி குடும்பத்தில் பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தர்ஷனும் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவாஜி கணேசனின் மகனான ராம்குமாரின் இரண்டாவது மகன் தான் தர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றல், பதாவா ஆகிய படங்களில் நடித்திருந்த ஷ்ரிதா ராவ் “லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன், தனது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். “லெனின் பாண்டியன்” திரைப்படத்தினை டி.டி.பாலசந்திரன் எழுதி இயக்கியுள்ள நிலையில், ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.



தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சில படங்களில், சிறப்புத் தோற்றத்தில் கங்கை அமரன் நடித்துள்ள நிலையில் ”லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் வாயிலாக படம் முழுவதும் வரும் வகையிலான ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கங்கை அமரன். தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கங்கை அமரன் சைக்கிளை பிடித்தவாறு, ஒரு விவசாயி போல் காட்சியளிக்கிறார். சைக்கிளில் தொரட்டி, சைக்கிளினை சுற்றி ஆடுகளும் இருக்கின்றன.

படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கையில் துப்பாக்கி ஏந்தியாவாறு போலீஸ் உடையில் மிடுக்காக இருக்கிறார். படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி குடும்பத்தில் நடிகராக கால் பதித்த பிரபு, விக்ரம் பிரபுவிற்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு தர்ஷன் கணேசனுக்கு கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.