சினிமா

25 நாட்களை கடந்த 'பைசன்' திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

'பைசன்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

25 நாட்களை கடந்த 'பைசன்' திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா?
Bison Movie Box Office
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் 'பைசன் காளமாடன்' திரைப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கபடி வீரரின் கதைக்களம்

இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

வரவேற்பை பெற்ற 'பைசன்'

தீபாவளி வெளியீடாக வந்த 'பைசன் காளமாடன்' திரைப்படம், வெளியானது முதல் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதால், முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையைக் கிளப்பியது. இதையடுத்து, இந்தப் படத்திற்குத் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தத் திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்திற்குத் தொடர்ந்து வரவேற்புக் கிடைத்து வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடி வெளியீடு குறித்த தகவல்

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 'பைசன் காளமாடன்' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 14-ஆம் தேதி இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.