சினிமா

மறுவெளியீட்டில் 1300 நாள்களைக் கடந்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா'!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், 1300 நாட்களைக் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மறுவெளியீட்டில் 1300 நாள்களைக் கடந்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா'!
'Vinnaithandi Varuvaaya' has crossed 1300 days since its re-release
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம், 15 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பிவிஆர் திரையரங்கில் மீண்டும் வெளியிடப்பட்ட இந்தப் படம், இதுவரை 1300 நாட்களைக் கடந்து, தொடர்ந்து திரையிடப்பட்டு வருவது இந்திய திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.

காதலின் யதார்த்தப் பதிவு

'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியான சமயத்தில், அதன் யதார்த்தமான கதைக்களுக்காகவே பெரும் வெற்றி பெற்றது. இளம் திரைப்பட இயக்குநர் கனவு கொண்ட கார்த்திக் என்ற இளைஞனுக்கும், ஜெஸ்ஸி என்ற மலையாள கிறிஸ்தவப் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலே படத்தின் மையக்கரு.

இருவரின் பின்புலமும், வயது வித்தியாசமும், சமூக எதிர்பார்ப்புகளும் அவர்களின் காதலுக்குப் பெரும் சவாலாக அமைகின்றன. இந்தப் படம், காதலின் வலிகளையும், உணர்ச்சிபூர்வமான போராட்டங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருந்தது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, சென்னை மற்றும் கேரளாவின் அழகை மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருந்தது.

இசை மற்றும் கதாபாத்திரங்களின் பலம்

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. "மன்னிப்பாயா", "கண்ணுக்குள் கண்ணு", "அன்பில் அவன்", "ஓமனப்பெண்ணே" போன்ற பாடல்கள் வெளியானது முதல் இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிலம்பரசன் மற்றும் திரிஷாவின் உயிரோட்டமான நடிப்பு, கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களுக்கு மேலும் உயிரூட்டியது. இந்தப் படம், புதிய கதைக்களங்களுக்கும், யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கும் ஒரு புதிய பாதையைத் திறந்ததால், தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

மறுவெளியீட்டில் தொடரும் வெற்றி

காலத்தைக் கடந்து ரசிக்கப்படும் இந்தப் படம், மீண்டும் திரையிடப்பட்ட போதும் ரசிகர்கள் மத்தியில் குறையாத வரவேற்பைப் பெற்று வருகிறது. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் புதிதாகவே உணர்வுகளைத் தரும் படம் என ரசிகர்கள் இந்தப் படத்தைப் புகழ்ந்து வருகின்றனர். இந்த அபூர்வ நிகழ்வை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #1300DaysOfVTV என்ற ஹாஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.