எச்சரிக்கும் மருத்துவர்:
சமீபத்தில் கைக்குழந்தை மாட்டின் காம்பிலிருந்து நேரடியாக பால் அருந்தும் வீடியோ வைரலானது. எக்ஸ் வலைத்தளத்தில் பிரபலமான ”the Liver Doc" என்கிற ஐடியினை கொண்ட மருத்துவர் இந்த வீடியோ தனது பக்கத்தில் பகிர்ந்து, இது முட்டாள்தனமான செயல் என குறிப்பிட்டுள்ளார். நேரடியாக மாட்டின் பாலினை அருந்துவதால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என குறிப்பிட்டுள்ளதோடு, சில மருத்துவ ஆய்வறிக்கைகளையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
மாட்டிலிருந்து கறந்த பாலை பச்சையாக நேரடியாகக் குழந்தைகளுக்குக் கொடுப்பது, பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஈ.கோலை (E. coli) போன்ற பாக்டீரியாக்கள் ஷிகா டாக்ஸின் (Shiga toxin) உற்பத்தி செய்து, குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தான சிக்கல்களை (சிறுநீரக செயலிழப்பு, இரத்த சோகை போன்றவை) ஏற்படுத்தலாம் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Good morning. Please do not feed your child, cow's milk directly from the animal's udder.
— TheLiverDoc (@theliverdr) July 23, 2025
Raw milk consumption has become a "trad fad" among the 'educated fools' now because of poor understanding of germ-theory of disease, but this level of child m*rder is a whole different… pic.twitter.com/KclfeSxxDT
மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுவது என்ன?
பசுவின் மடியில் இருந்து நேரடியாகப் பெறப்படும் பாலில் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிரிகள் இருக்கலாம். இவை குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
நேரடியாக கறந்த பசும் பாலில் ஈ.கோலை என்னும் பாக்டீரியா ஷிகா டாக்ஸின் (Shiga toxin) எனப்படும் ஒரு நஞ்சை வெளியிடலாம். இந்த நஞ்சு குழந்தைகளின் குடல்களைப் பாதித்து, கடும் வயிற்று வலி, ரத்தப்போக்குடன் கூடிய வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். இதை அலட்சியப்படுத்தினால், குழந்தைகளின் இரத்த சிவப்பணுக்கள் செயலிழந்து இரத்த பிளேட்லெட்டுகள் குறைந்து, இறுதியில் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும் (Hemolytic Uremic Syndrome - HUS) அபாயம் உள்ளது. மேலும், இது குழந்தைக்கு டயாலிசிஸ் தேவைப்படும் அளவுக்குக் கொண்டு சென்று, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். மூளைக்கு நச்சுத்தன்மை பரவினால் வலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
சால்மோனெல்லா (Salmonella), லிஸ்டீரியா (Listeria), காம்பிலோபாக்டர் (Campylobacter) இந்த பாக்டீரியாக்களும் கறந்த பாலில் காணப்படலாம். இவை கடும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி, உடல்நடுக்கம் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். இந்த தொற்றுகள் பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் தாக்கும்.
நேரடியாகக் கறக்கப்படும் பாலில், பசுவின் மடி மற்றும் அதைச் சுற்றியுள்ள தோலின் மீதுள்ள அழுக்கு, கிருமிகள், சாணம் ஆகியவை கலக்க வாய்ப்புள்ளது. இவை மேலும் பல நோய்த்தொற்றுக்குக் காரணமாகலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட டெல்லி கிரேட்டர் நொய்டா பகுதியில், பசுவின் பாலினை நேரடியாக பருகி வந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுக்குறித்து விசாரித்த போது, மாட்டிற்கு ரேபிஸ் தொற்று இருந்துள்ளது. இதுத்தெரியாமல், அந்த மாட்டின் பாலினை நேரடியாக பருகி வந்தால் உடல்நல பிரச்சினையால் அவதியுற்று மரணமடைந்தார்.
பாஸ்டரைசேஷன் (Pasteurization) ஏன் அவசியம்?
பாஸ்டரைசேஷன் என்பது கறந்த பாலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்துவது தான். இவ்வாறு, பாலினை சூடுபடுத்தும் போது, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழியும். சிலர் பாலினை சூடுபடுத்துவதால், அதனின் சத்துகள் குறையும் என தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது உண்மையில்லை, பாஸ்டரைஸ் செய்யப்பட்ட பால் மட்டுமே குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளவும்.