இந்தியா

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
C P Radhakrishnan Sworn in as Vice President
இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தேர்தல் வெற்றி

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் களமிறக்கப்பட்டனர்.

மொத்தம் 781 வாக்குகள் உள்ள நிலையில், பிஜு ஜனதாதளம், பி.ஆர்.எஸ்., அகாலி தள் உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. 767 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 752 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டது. இதில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பு

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பு விழா இன்று தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கிறனர்.