இந்தியா

புதுச்சேரியில் பிரபல மாடல் அழகி தற்கொலை...வெளியான அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் பிரபல மாடல் அழகி தற்கொலை...வெளியான அதிர்ச்சி தகவல்
மாடலிங் துறையில் பல்வேறு விருதுகளை வென்ற அழகி சான் ரேச்சல்
புதுச்சேரி, காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல்(26). இவர் ஒரு வருடத்திற்கு முன்பு நூறடி சாலை ஜான்சி நகரை சேர்ந்த சத்யா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

சிறுநீரகங்கள் செயலிழப்பு

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி ரேச்சல் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் பி.பி மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக, அவரது தந்தை காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பதறியடித்துக்கொண்டு தந்தை காந்தி, மகளை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு ரேச்சலுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ரேச்சல் மருத்துவரின் அனுமதி இன்றி கடந்த 8ம் தேதி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 13ம் தேதி ரேச்சலுக்கு திடீரென கை, கால், முகம் வீக்கம் அடைந்ததால் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சான் ரேச்சல் உயிரிழப்பு

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக 20ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரேச்சல் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் விசாரணையில் பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகளை நடத்த கடன் பெற்றதாகவும், அது குறித்து தனது கணவரிடம் தெரிவிக்காமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், தன் மரணத்திற்கு தனது கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு விருதுகள்

சான் ரேச்சல் மாடலிங் துறையில் நிறவெறிக்கு எதிராக தனது துணிச்சலான நடவடிக்கையால் பெயர் பெற்றவராக உள்ளார். ரேச்சல் மாடலிங் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார், அவரது படைப்புகள் மூலம் மட்டுமல்லாமல், இந்திய சினிமா மற்றும் ஃபேஷனில் ஆழமாக வேரூன்றிய வெள்ளைத் தோல் அழகி மோகத்தை சவால் செய்ததற்காகவும். கருமையான சருமம் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து அவர் குரல் கொடுத்தார். 2022ல் மிஸ் புதுச்சேரி பட்டத்தையும் வென்றார்.

மேலும், மிஸ் டார்க் குயின் தமிழகம், குயின் ஆப் மெட்ராஸ் - 2022, மிஸ் ஆப்ரிக்கா கோல்டன் இந்தியா – 2023 என பல்வேறு போட்டிகளில் பல விருதுகளை பெற்றுள்ளார்.இவரது மரணம் மாடலிங் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால் தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104க்கு தொடர்பு கொண்டு பேசலாம்)