சினிமா

தமிழில் அறிமுகமாகும் ‘வேடன்’.. யார் படத்தில் தெரியுமா?

ராப் பாடகர் வேடன், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.

தமிழில் அறிமுகமாகும் ‘வேடன்’.. யார் படத்தில் தெரியுமா?
Rapper Vedan is making his Tamil debut as a music composer
ராப் பாடகர் வேடன், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சமூகப் பிரச்சனைகள் குறித்த கூர்மையான வரிகளுக்காக அறியப்படும் வேடன், 'கோலி சோடா' புகழ் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஹிரந்தாஸ் முரளி என்ற இயற்பெயர் கொண்ட வேடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் தாய்க்கும், கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர். 2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளியான தனது முதல் ஆல்பமான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார். "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படங்களான 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' திரைப்படத்தில் 'குத்தந்திரம்' பாடல் மூலம் இவர் புகழ் பெற்றார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதிப் பாடியிருந்தார். திரைப்படங்களைத் தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் மில்டன் இயக்கும் இந்தப் புதிய படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.