சினிமா

'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல்!

'ஜனநாயகன் பட' தணிக்கைச் சான்று விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல்!
JanaNayagan Case
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் நிலவி வரும் சிக்கல்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

தணிக்கை சான்றிதழ் சர்ச்சை

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுப்புத் தெரிவித்தது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான 'கே.வி.என். புரொடக்சன்ஸ்' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

உயர் நீதிமன்ற அமர்வின் அதிரடித் தீர்ப்பு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தணிக்கை சான்று வழங்கக் கோரிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இது படக்குழுவினருக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே யூகித்த மத்திய தணிக்கை வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு (Caveat Petition) தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், 'ஜனநாயகன்' படம் தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தணிக்கை வாரியத்தின் விளக்கத்தைக் கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவோ அல்லது தீர்ப்போ பிறப்பிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.