சினிமா

LCU ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

கைதி - 2 திரைப்படம் கைவிடப்படவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

LCU ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
Lokesh Kanagaraj
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரஜினி - கமல் படம் தள்ளிப்போனது ஏன்?

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் ஆளுமைகளையும் இணைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷிற்கு கிடைத்தது. இது குறித்துப் பேசிய அவர், "இருவரிடமும் கதையைச் சொன்னேன். ஆனால், அவர்களுக்குத் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிக்கச் சற்று தயக்கம் இருந்தது. என்னிடம் ஒரு 'லைட் ஹார்ட்' கதையை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த வகையான கதைகளை இயக்குவதில் நான் சற்று பலவீனமானவன். ஆக்ஷன் கதைகள்தான் எனது பலம் என்பதால், அந்தத் திட்டத்திலிருந்து நான் வெளியேறினேன்" என்று பதிலளித்தார்.

அல்லு அர்ஜுனுடன் கூட்டணி

கூலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை லோகேஷ் இயக்கவுள்ளார். இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், "மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே நான் முன்பணம் வாங்கியிருந்தேன். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

LCU ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

கார்த்தி நடிப்பில் உருவான 'கைதி 2' திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்தார். "கைதி 2 நிச்சயமாக நடக்கும். அல்லு அர்ஜுன் படத்தை முடித்த கையோடு கைதி 2 பணிகளைத் தொடங்குவேன். அதன் பிறகு விக்ரம் 2 மற்றும் சூர்யாவின் 'ரோலக்ஸ்' கதாபாத்திரத்தை மையமாக வைத்துத் தனித் திரைப்படம் என லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) விரிவடையும்" என்று தெரிவித்தார்.