இந்தியா

அமைச்சரின் உறவினர் வீட்டில் மர்ம மரணம்.. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் உறவினர் வீட்டில் மர்ம மரணம்.. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!
Mysterious death at minister's relative's house
கேரள மாநிலம் கண்ணூர், சிரக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே ஒரு முதிய தம்பதி உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள், வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரனின் உறவினரான ஏ.கே.ஸ்ரீலேகா (68) மற்றும் அவரது கணவர் பிரேமராஜன் (75) என வளபட்டணம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களின் இளைய மகன் ஷிபின் பஹ்ரைனில் இருந்து வருவதற்கு இருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவர்களின் மூத்த மகன் பிரபித் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

வீட்டிற்குள் இருந்து பூட்டப்பட்ட கதவு

போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த தம்பதியின் கார் டிரைவரான சரோஷ் என்பவர் ஷிபினை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) மாலை 5.45 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பலமுறை அழைத்தபோதும் கதவு திறக்கப்படாததால், அவர் அக்கம் பக்கத்தினருக்கும், வளபட்டணம் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அதன்பின், வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பார்த்தபோது, படுக்கையறையில் தம்பதி இருவரும் உடல் கருகி இறந்து கிடந்தது தெரியவந்தது.

அன்றைய தினம் காலை முதல் தம்பதியினர் வெளியே வரவில்லை என்றும், காலை நாளிதழ் கூட கேட்டில் இருந்த பெட்டியில் அப்படியே இருந்தது என்றும் அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். வீட்டின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது என்றும் கண்டறியப்பட்டது.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை அதிகாரிகள், படுக்கையறையில் இருந்து ஒரு சுத்தியல் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும், பிரேதப் பரிசோதனைக்கு முந்தைய விசாரணையில், ஸ்ரீலேகாவின் தலையில் காயம் இருந்தது, அது சுத்தியலால் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தம்பதியின் உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஸ்ரீலேகாவை பிரேமராஜன் சுத்தியலால் அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் குழுவினர் வீட்டை முழுமையாகச் சோதனையிட்டனர். கண்ணூர் நகர காவல் ஆணையர் பி.நிதின் ராஜ், வளபட்டணம் காவல் ஆய்வாளர் பி.விஜேஷ், மற்றும் எஸ்.ஐ. டி.எம்.விபின் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விசாரணையைத் தொடர்ந்து, சடலங்கள் கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.