இந்தியா

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞன்.. பரபரப்பு சம்பவம்!

ஹரியானா மாநிலத்தில், காதலை ஏற்க மறுத்த மாணவியை, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞன்.. பரபரப்பு சம்பவம்!
Young man shoots student
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில், 17 வயதுப் பள்ளி மாணவி ஒருவரைக், காதலை நிராகரித்த ஆத்திரத்தில் பின் தொடர்ந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குண்டுகள் பாய்ந்ததில் படுகாயம் அடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தாக்குதலின் விவரம்

பாதிக்கப்பட்ட மாணவி நேற்று (நவ.3) தனது பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜதின் மங்ளா என்ற இளைஞன் அவரைச் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஜதின், மாணவியைத் தொடர்ந்து பின் தொடர்ந்ததாகவும், மாணவி அவனது காதலை ஏற்க மறுத்ததால் இந்த ஆத்திரத் தாக்குதலை நிகழ்த்தியதாகவும் தெரிகிறது.

சிசிடிவி-யில் பதிவான கொடூரம்

இந்தத் தாக்குதல் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், குற்றவாளி ஜதின் மங்ளா ஒரு பைக்கின் அருகே நின்று மாணவிக்காகக் காத்திருப்பது தெரிகிறது. மாணவி வருவதைக் கண்டவுடன், துப்பாக்கியைக் கையில் எடுத்த அவன், இருமுறை சுடுகிறான். பயத்தில் மாணவியுடன் வந்த இரண்டு மாணவிகள் அலறியடித்து ஓடிவிடுகின்றனர். மாணவிக்குத் தோள்பட்டை மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்ததால், அவர் வலியால் துடித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் உடனடியாகத் தனது பையை எடுத்துக்கொண்டு பைக்கில் வேகமாகத் தப்பிச் செல்கிறான்.

மாணவி குடும்பத்தின் ஆதங்கம்

பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி இதுபற்றிக் கூறுகையில், "அவன் இதயத்தைக் குறிவைத்துச் சுட்டான், ஆனால் அவள் கையால் தடுக்க முயன்றதால், குண்டு கையைத் துளைத்துத் தோள்பட்டையில் தாக்கியது" என்று வேதனை தெரிவித்தார். ஜதின் சில நாட்களாகவே மாணவியைப் பின்தொடர்ந்தது குறித்து அவனது குடும்பத்தினரிடம் கூறியபோது, அவனது தாய் கெஞ்சிக் கேட்டதால், அச்சமயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். "ஆனால், மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் நடந்தது," என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

போலீசார் நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் கூறியதாவது, "குற்றம் சாட்டப்பட்டவர் மாணவிக்கு ஏற்கெனவே தெரிந்தவர். பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளியை அடையாளம் காட்டிவிட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி ஜதின் மங்ளாவைத் தேடும் பணியில் காவல்துறையும் குற்றப்பிரிவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.