அரசியல்

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுக்க அதிமுக தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜய் அட்டாக் செய்து வீடியோ ஒன்று வெளியாகி தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!
TVK vs ADMK
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அதிமுக-வை 'ஊழல் கட்சி' என்று விமர்சித்ததைத் தொடர்ந்து, அதிமுக தரப்பிலிருந்து அதற்கு மிகக்கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிமுக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

விஜய்யின் விமர்சனமும் அதிமுக-வின் எதிர்வினையும்

மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜக-வை மட்டும் தாக்கி வந்த நிலையை மாற்றி, அதிமுக-வையும் 'ஊழல் கட்சி' என்று நேரடியாக விமர்சித்தார். இதனால் அதிருப்தியடைந்த அதிமுக ஐடி விங்க், நேற்று 'பனையூர் பண்ணையார்' என விஜய்யை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஏஐ வீடியோ வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய ஏஐ வீடியோவில் என்ன இருக்கிறது?

'அதிமுக தமிழ்நாடு' என்ற எக்ஸ் X தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட காலகட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விஜய் நேரில் சந்தித்து, "மாஸ்டர் படம் வெளியாக நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று விஜய்யின் தோளைத் தட்டிக் கொடுத்து தைரியம் கூறி அனுப்பி வைக்கிறார்.

வீடியோவின் இறுதியில், தனக்கு உதவிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது காலில் விஜய் விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்

இந்த வீடியோ தவெக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவரைச் சிறுமைப்படுத்தும் வகையில் அதிமுக தரமற்ற அரசியலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே சமயம், "உதவி செய்தவர்களையே ஊழல் கட்சி என்று விமர்சித்தால் இப்படித்தான் பதிலடி கிடைக்கும்" என அதிமுக தொண்டர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.