அரசியல்

'கரூர் விவகாரத்தை மனதில் வைக்க வேண்டும்..' விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்!

"தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது, ஒரு சின்ன பையனின் பேச்சாக தான் விஜய் பேச்சை பார்க்கிறேன்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

'கரூர் விவகாரத்தை மனதில் வைக்க வேண்டும்..' விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்!
Tamilisai Soundararajan and Vijay
நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர்கள் குஷ்பு, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

'மொழிப்போர் தியாகிகளின் ஆன்மா மன்னிக்காது'

தேசிய கொடியை ஏற்றிய பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "2026 தேர்தலில் தமிழ்நாட்டில் விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற உறுதியை இன்றைய தினம் நாம் எடுக்க வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தினீர்களே இப்போது யாருடன் திமுக கைகோர்த்துள்ளீர்கள். மொழிப்போர் தியாகிகளின் உயிரைப் பறித்த காங்கிரஸோடு கைகோர்த்துக்கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துவதை தியாகிகளின் ஆன்மா மன்னிக்காது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது, ஒரு சின்ன பையனின் பேச்சாக தான் விஜய் பேச்சை பார்க்கிறேன். உண்மையாகவே தம்பி விஜய் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அவர் தனியாக நின்றால் ஜீரோ தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவு தருவார்கள். காங்கிரசில் இன்று விசில் அடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

விஜய்க்கு தமிழிசை கொடுத்த அட்வைஸ்

மேலும் அவர், "எம்ஜிஆர் அரசியலோடு சினிமாவில் பயணித்தவர். அதனால் அரசியலில் வெற்றி பெற்றார்.
விஜய் நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றிபெற முடியாது. தனது தொண்டர்கள், ரசிகர்களை ஏமாற்றிவிட வேண்டாம். வெற்றி பெரும் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

விஜய் தனித்து நிற்பதை காட்டிலும் யாருடன் கூட்டணியில் நிற்றால் நன்றாக இருக்கும். விஜய் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலில் NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர் தொடர்ந்து அரசியல் செய்யலாம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் விவகாரத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும்" எனவும் விஜய்யை எச்சரித்தார்.