அரசியல்

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!
Anwar Raja Joins DMK
வரவிருக்கிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியுடன் என வெளிப்படையாக அறிவித்த போதே அதிமுகவின் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்தது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அதிமுக தொண்டர்களிடையே இன்னும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

அமித்ஷாவின் கருத்துத் தொடர்பாக அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா, சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

”2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி தான் என பா.ஜ.க நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கப் போவது அதிமுக தான். இதனை பா.ஜ.க ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜகவின் எண்ணம்; அது ஒருக்காலும் நடக்காது” என அன்வர் ராஜா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்றையத் தினம் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம், அன்வர் ராஜா திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் அதிமுக தலைமைக்கு சென்றது தான் காரணம் என கூறப்படுகிறது.

தகவலை உறுதி செய்யும் வகையில் திமுகவின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்திற்கு அன்வர் ராஜா வருகைத் தந்துள்ளார். திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.