தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி பார்க்கிங் கட்டணம் இல்லை!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி பார்க்கிங் கட்டணம் இல்லை!
No more parking fees
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலுக்கான ஒப்பந்தம் நேற்றுடன் (ஜூலை 20) நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் நிறைவு

இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் (20.07.2025) முடிவடைந்தது.

கட்டணம் செலுத்த தேவையில்லை

இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” எனத் குறிப்பிட்டுள்ளது.