அரசியல்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
Nainar Nagendran
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி செல்கின்றனர்.

அங்கு அவர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, தமிழ் மண்ணைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்ததற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க உள்ளனர். இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

'தமிழ் மண்ணுக்குப் பெருமை'

"பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு எத்தனையோ பெருமைகளைச் சேர்த்திருக்கிறது. அதில் எல்லாம் மணிமகுடமாக, தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனைத் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து பெருமை சேர்த்திருக்கிறது. தமிழரை வேட்பாளராக அறிவித்ததற்காக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும்

"தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடு இன்றி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "இந்தியக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது அவர்களுடைய விருப்பம். அதில் நாம் எதுவும் கூற முடியாது. இருந்தாலும், இது தமிழகத்திற்குப் பெருமை கொடுக்கக்கூடிய விஷயம். எனவே, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.

ஆதரவு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்," என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.