அரசியல்

"திமுகவின் உருட்டுக் கடை அல்வா"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.


Edappadi Palaniswami criticized CM Stalin
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று நடைபெற்ற நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சுகாதாரத்துறை அலட்சியம்

"தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியமே 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கக் காரணம்" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், இருமல் மருந்தால் பல குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் தாமதமாகவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஸ்ரீசன் நிறுவனம் தொடர்ந்து தவறு செய்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்காது" என்றும் அவர் தெரிவித்தார்.

கிட்னி திருட்டு விவகாரம்

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் குறித்துப் பேசிய அவர், "கிட்னி திருட்டு விவகாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. கிட்னி திருட்டில் ஈடுபட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். மேலும், "சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. யாரைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"மு.க. ஸ்டாலின் கொடுத்தது உருட்டுக் கடை அல்வா"

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "2021ஆம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதில் 10 சதவீத அறிவிப்பைக் கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்" என்று கூறினார்.

அப்போது, அவர் தி.மு.க.வின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் விதமாக, "தி.மு.க. உருட்டுக் கடை அல்வா" என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார்.