அரசியல்

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
Edappadi Palaniswami
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வரவிருக்கும் தேர்தலுடன் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, அரசின் கடன்கள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

கூட்டணிக்கு அழைப்பு

திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த இ.பி.எஸ்., "திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம்" என்று அழைப்பு விடுத்தார். மேலும், "இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு. இதற்கு மேல் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது," என்று திட்டவட்டமாகக் கூறினார்.

நிதிச் சுமை குறித்து கருத்து

தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி நிறைவு பெறும்போது ரூ.5 லட்சம் கோடி கடன்பெற்ற மாநிலமாகத் தமிழகம் இருக்கும். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கடன் பெற்றதில் சாதனை படைத்த ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு மற்றும் பொங்கல் பரிசு குறித்த கோரிக்கைகள்

மேலும், "100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை திமுக அரசுக்கு பாராட்ட மனமில்லை. 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை மத்திய அரசு செய்துள்ளது. அதேசமயம், 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதையும், ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மீதான விமர்சனம்

செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் திமுக அரசு திட்டமிட்டே ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி "கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது. கல்விக்கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டர் மானியம் என்ற திமுக அறிவிப்புகள் என்ன ஆனது?" என்றும் கேள்வி எழுப்பினார்.

வாக்காளர் பட்டியல் குறித்து கருத்து

வாக்காளர் பட்டியல் நீக்கம் குறித்த விவகாரத்தில், "எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பின் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தவறான தகவலைக் கூறுகின்றனர். போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத்தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை வைத்து திமுக இவ்வளவு நாட்களாக வெற்றி பெற்று வந்துள்ளது. இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து திமுகவுக்கு வாக்களித்தனர்," என்று விமர்சித்தார். மேலும், எஸ்.ஐ.ஆர். நடைமுறை எல்லாக் கட்சிக்கும் பொதுவானது என்றும், உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் படிவத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.