அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Minister K.N.Nehru
திருச்சி மாநகரம் உறையூர் பகுதிக்குட்பட்ட 8 மற்றும் 9வது வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு,”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர், "நான்கு ஆண்டுகள் வெளியே வராமல் தற்போதுதான் வெளியே வந்துள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தேர்தலுக்காக' எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியே வந்துள்ளதும் தேர்தலுக்காகத்தான்" என்றார்.

"மக்கள் ஐந்தாண்டுகள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்கள். ஐந்தாண்டுகளுக்குள்ளாக மக்களுக்குத் தேவையானவற்றைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை' மக்கள் யாரும் குறை கூறவில்லை" என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால் இந்தத் திட்டங்களை அவர் விமர்சனம் செய்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஆன பின்பு அவர் மக்களைச் சந்திக்காமல் தற்போது வெளியே வந்துள்ளார். அவர் இந்தத் திட்டங்களை விமர்சிப்பது நியாயமா?" என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

"காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது திமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. தமிழ்நாட்டிற்குத் தேவையானவற்றை திமுக அரசு கேட்டபோது, அவற்றை காங்கிரஸ் அரசு செய்து கொடுத்தது. ஆனால், அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தமிழ்நாட்டிற்குத் தேவையான எதையும் செய்யவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.