இந்தியா

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு

“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு
PM Modi
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து, மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பாராட்டும் மனம் இல்லை என்று பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்: மோடியின் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார். "அமெரிக்க துணை அதிபர் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு, பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதலை நடத்த உள்ளது எனக் கூறினார். பாகிஸ்தான் தாக்கினால் அதற்கு மிகப்பெரிய பதிலடி தருவோம் என்று நான் பதிலளித்தேன். பாகிஸ்தான் கொடுக்கும் ஒவ்வொரு துளிக்கும் நாங்கள் ஒரு பீரங்கிக் குண்டுகளை பதிலாகக் கொடுப்போம்" என்று தெரிவித்தாக பிரதமர் மோடி கூறினார்.

ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் தெளிவாக இருந்தன. பாகிஸ்தான் விமான தளங்களில் கடும் பாதிப்பை உருவாக்கியது இந்திய பாதுகாப்புப் படை. இந்தியாவின் தற்சார்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் திறனை "சிந்தூர் நடவடிக்கையின்" போது வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானுக்குள் 22 நிமிடங்களில் பயங்கரவாத முகாம்களை அழித்தோம்" என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.


உலக நாடுகள் ஆதரவு, பாகிஸ்தானின் கெஞ்சல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசுகையில், "உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது. 'எங்களால் முடியவில்லை, தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள்' என பாகிஸ்தான் கதறியது. ஐ.நா. உள்படப் பல உலக நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. 193 உலக நாடுகளில் சீனா, துருக்கி என வெறும் 3 நாடுகளின் ஆதரவுதான் பாகிஸ்தானுக்குக் கிடைத்தது. ஆனால், இந்தியாவுக்கு 190 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டோம். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது" என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

"இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூரில் 100 சதவீத இலக்கை எட்டியது. ஆனால், 'மோடி தோற்றுவிட்டார்' எனக் கூறி காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது. எதிர்க்கட்சிகள் அனைவரும் என்னையே குறி வைத்துத் தாக்குகிறார்கள். இந்தியா மீதும், ராணுவ வலிமை மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு உலகின் மொத்த ஆதரவும் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, துணிச்சல் மிகுந்த நம்முடைய நாட்டின் வீரர்களுக்கு காங்கிரஸின் ஆதரவு கிட்டவில்லை" என்று பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்தார்.

"ஒரே இரவில் பாகிஸ்தானுக்கே சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் நையாண்டி செய்கிறார்கள். எப்போதுமே மக்கள் மனங்களை காங்கிரஸால் வெல்ல முடியாது" என்று அவர் தெரிவித்தார்.