அரசியல்

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்- ஜி.கே.வாசன்

“எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்.. ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்- ஜி.கே.வாசன்
Edappadi Palaniswami and G.K.Vasan
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே வாசன், “தமிழகத்தை உலுக்கிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம். காவல்துறையின் மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகள் காரணமாக காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எப்ஐஆர் கூட பதியாமல் ஒருவரை சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தி கொலை செய்தது மிகுந்த வேதனைக்கும், வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை, திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார் ? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது. முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்.

இறந்த காவலாளி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக தலைமையிலான கூட்டணி நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டணி தலைவராக உள்ளார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்பட கூறியுள்ளார். நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்மறை வாக்கு தமிழகத்திலே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது .

நாளை முதல் கோவை மண்டலத்திலிருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரது சுற்று பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என தெரிவித்தார்.

பாஜக இந்தி மொழியை திணிப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “இந்தி மொழியை மத்திய பாஜக அரசு ஒருபோதும் திணிக்கவில்லை. பாஜகவை பொறுத்தவரை அவரவர் சார்ந்த தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தாய்மொழி தான் முதல் மொழி என்பதில் அவர்களுக்கு மாற்று கருத்து கிடையாது. முதல் மொழி தாய்மொழி.‌ இரண்டாவது இணைப்பு மொழியாக ஆங்கிலம்.‌ மூன்றாவது மொழி வேண்டுமா? வேண்டாமா ? என்பது அவரவர் விருப்பம். மூன்றாவது மொழி கற்றுக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து. எனவே மொழி விவாகரத்தில் தவறான தகவலை திமுக கூறி வாக்கு வங்கி அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.