அரசியல்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- இபிஎஸ் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- இபிஎஸ் குற்றச்சாட்டு
Even the police have no security under DMK rule- Edappadi Palaniswami
சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி போதை கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன் இன்று உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், 2 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு

சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.எஸ்.ஐ. ராஜராஜன் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.

ஆனால், ஒரு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

நேர்மையான விசாரணை வேண்டும்

காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து பொது வெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

எஸ்.எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.