அரசியல்

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
CM Stalin
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பெரியாரின் உருவப்படத்தை இங்கு திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஏழு நாட்கள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி, தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

பெரியார் பேரன் என்ற கம்பீரத்துடன்…

அப்போது அவர் பேசுகையில், "பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு, தமிழக முதலமைச்சர் என்ற தகுதியுடனும், தெற்காசியாவில் அரசியலை புரட்டிப்போட்ட தி.மு.க.வின் தலைவர் என்ற தகுதியுடனும் மட்டுமல்லாமல், பெரியாரின் பேரன் என்கிற கம்பீரத்துடனும் உங்கள் முன் வந்துள்ளேன்.

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் உருவப்படத்தை இங்கு திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். தந்தை பெரியார் இன்று உலகம் முழுக்க தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவருடைய உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை

சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர் பெரியார். ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர். பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டவர். தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை என்று” முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து, ஏராளமானோர் இங்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேறி வருகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை" என தெரிவித்தார்.