அரசியல்

தமிழர்களின் சுயமரியாதையை காத்தவர் நமது முதல்வர்- எம்பி கனிமொழி பேச்சு

’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

தமிழர்களின் சுயமரியாதையை காத்தவர் நமது முதல்வர்- எம்பி கனிமொழி பேச்சு
Kanimozhi MP Slams Union Government in Nellai event
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய திமுகவின் ஏற்பாட்டில், பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் வழியாக மக்களை நேரடியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட கனிமொழி எம்.பி., தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஒன்றிய அரசு பல்வேறு பிரச்சனைகளையும், தொந்தரவுகளையும் ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். இருப்பினும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, தமிழக முதல்வர் ஒரு சிறப்பான, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை நடத்தி வருவதாக பாராட்டினார்.

ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு புறக்கணிப்பு:

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதாக கனிமொழி எம்.பி. தனது உரையில் சரமாரியாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட வேண்டிய 2000 கோடி ரூபாய் நிதியையும் ஒன்றிய அரசு வழங்க மறுப்பதாகத் தெரிவித்தார். "இந்தி படித்தால் 2000 கோடி நிதி தருவோம் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், 10 ஆயிரம் கோடி தந்தாலும் வேண்டாம், இந்தி படிக்கமாட்டோம் என தமிழர்களின் மொழிவழி சுயமரியாதையை நெஞ்சில் நிறுத்தி காத்தவர் நமது முதலமைச்சர்" என்று கனிமொழி குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள்:

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டிய கனிமொழி எம்.பி., 'விடியல் பயணம்', 'இல்லம் தேடி கல்வி', 'மக்களை தேடி மருத்துவம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகப் பாராட்டினார். "ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தாலும், தமிழக மக்களைப் பாதுகாப்பேன் என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவரே தமிழகத்தின் உண்மையான பாதுகாவலன்" என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

"மொழி, நமது சரித்திரம், உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து நிலைகளிலும் தமிழகம் ஓரணியில் திரள வேண்டும். நல்லாட்சி தொடர வேண்டும். தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி திமுக மட்டும்தான்" என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

அதிமுகவை கடுமையாக விமர்சித்த அவர், "பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று தொடர்ந்து கூறி வந்தார்கள். ஆனால், டெல்லியிலிருந்து ஒரு மிரட்டல் வந்தவுடன் பயந்துவிட்டார்கள். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு ஒருமித்த கருத்தோடு உறுதியாக உள்ளது என்பதை ஒன்றிய அரசு முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்" என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.