இந்தியா

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி
Karnataka ASP Seeks Voluntary Retirement Amidst Public Humiliation by CM Siddaramaiah
ஒரு சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்வொன்றில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, காவலர் ஒருவரை கன்னத்தில் அறையும் வகையில் கை ஓங்கினார். அப்போதே இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த காவலர் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது கர்நாடக அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் விலைவாசி உயர்வை எதிர்த்து கடந்த ஏப்ரல் 28 அன்று ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்ட பேரணி நடைப்பெற்றது. அப்போது மேடையில் காவலர் என்.வி.பராமணியினை நோக்கி கடுமையான வார்த்தைகளை கூறி, அடிக்க கையினை ஓங்கினார் முதல்வர் சித்தராமையா.

இந்நிலையில், ஜூன் 14 ஆம் தேதியன்று விருப்ப ஓய்வுக் கோரி மாநில உள்துறை செயலாளரிடம் தனது கடிதத்தை சமர்பித்துள்ளார் காவலர் என்.வி.பராமணி. தற்போது இதுத்தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. தனது கடிதத்தில் ”முதல்வரால் நான் பொது வெளியில் அவமதிக்கப்பட்டேன். அந்த சம்பவத்தால், நானும் எனது குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானோம்” என குறிப்பிட்டுள்ளது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது கடிதத்தில், "கடந்த 31 ஆண்டுகளாக, நான் கர்நாடக மாநில காவல்துறையில் நேர்மையுடன் பணியாற்றி வருகிறேன். காக்கி சீருடையுடனான எனது உறவு, என் சொந்த தாயின் மீது வைத்துள்ள அன்பினை போலவே உணர்ச்சிபூர்வமானது. முதல்வர் சித்தராமையா மேடையில் இருந்து தன்னை நோக்கி, "ஏய்! இங்கே யார் இந்த எஸ்பி? வெளியே போ!" என்று கத்தினார், பின்னர் தன்னை அறைவது போல் கையை உயர்த்தினார். ஒரு சில வினாடிகள் மட்டுமே நடைப்பெற்ற இந்த செயல், தொலைக்காட்சியில் இரண்டு நாட்கள் ஒளிபரப்பப்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரிக்கு பொதுவெளியில் இத்தகைய அவமதிப்பு ஏற்படுவது அவரது மன உறுதியையும், கௌரவத்தையும் குலைத்துவிடும். அதற்கு நான் ஒரு சான்று.

சம்பவத்திற்குப் பிறகு எந்தவொரு உயர் அதிகாரியும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ அல்லது ஆறுதல் கூறவோ முன்வரவில்லை. இது தன்னை மேலும் தனிமைப்படுத்தியதாகவும்” தனது கடிதத்தில் பராமணி கூறியுள்ளார். விருப்ப ஓய்வு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையாவும், மூத்த அமைச்சர்களும் காவல் அதிகாரி, என்.வி.பராமணியினை தொடர்பு கொண்டு, அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் எரிச்சலடைந்ததுடன், "நீங்கள் பாஜகவைச் சேர்ந்தவரா?" என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது மேலும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரின் இத்தகைய நடத்தைக்கு, கர்நாடக மாநில எதிர்கட்சியான பாஜக மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய செயல்கள் ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல என்றும், இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.