அரசியல்

கரூர் பெருந்துயரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணம் தற்காலிக ரத்து?

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் பெருந்துயரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணம் தற்காலிக ரத்து?
TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (செப். 27) கரூரில் நடத்திய மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, அவர் தனது அரசியல் பயணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை

கரூர் கூட்டத்தில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தத் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் தவெக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பயணத் திட்டம் ரத்து

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய மக்கள் சந்திப்பு அரசியல் பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை வாரத்திற்கு இரண்டு மாவட்டம் என விஜய்யின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.