அரசியல்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கோரிக்கையும், கட்சி பிளவுபட்டால் திமுக குளிர் காயும் என தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கழக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்"

அந்தக் கடிதத்தில், “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்ற மனதுடன் அனைவரும் கைகோர்ப்பதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். நம் இருபெரும் தலைவர்களின் (எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) எண்ணங்களையும் அது ஈடேற்றிடும்,” என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, நமது பிளவுகளால் திமுக குளிர் காய்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"தொண்டர்களின் முடிவே இறுதியானது"

அதிமுக ஒரு தொண்டர்களின் இயக்கம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்ட சசிகலா, "தொண்டர்களின் முடிவே இறுதியானது. அவர்களின் விருப்பத்திற்கேற்ப, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்திச் செல்வோம்,” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி என்பதை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் நிரூபித்துள்ளனர். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும் என்று கூறிய சசிகலா, ஒன்றுபட்ட வலிமையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம் என்றும், மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஒருசில தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், சசிகலாவின் இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.