அரசியல்

கர்நாடகாவை போல், தமிழகத்திலும் தேவை- திருமாவளவன் வலியுறுத்தல்

இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் மனதார பாராட்டுகிறது வாழ்த்துகிறது.

கர்நாடகாவை போல், தமிழகத்திலும் தேவை- திருமாவளவன் வலியுறுத்தல்
விசிக தலைவர் திருமாவளவன்
தனி காவல் நிலையங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மாவட்டங்கள்தோறும் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமைகளை விசாரிக்கும் தனி காவல்நிலையங்கள் அமைத்து செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் அமைத்திட அரசை வலியுறுத்தி உள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் கர்நாடகா அரசு செயல்படுத்தி உள்ளதை பிற மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் கோவிலில் வழிபடுவதில் அண்மை சில ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. தேர் வடத்தை தொட்டு வழங்குவது ஆதி திராவிடர்களின் பாரம்பரிய உரிமை, அதை செய்ய சென்றவர்களை சில இளைஞர்கள் சாதியை சொல்லி தாக்கி உள்ளனர். இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் மீதும், காயமடைந்தவர்கள் மீது வழக்குப்பதிவு என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப்போக்கை கண்டித்து எனது தலைமையில் புதுக்கோட்டையில் 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.

இந்திய ராணுவத்திற்கு பாராட்டு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத சக்திகள் நடத்திய இனப்படுகொலையை விசிக வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது உலகளாவிய தேவையாக உள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் மனதார பாராட்டுகிறது வாழ்த்துகிறது.

முதலமைச்சர் தலைமையில் திமுக நடத்தும் பேரணியில் விசிக பங்கேற்கும்.மே 31ம் தேதி மதசார்பின்மை காப்போம் மாபெரும் பேரணி திருச்சியில் நடத்துகிறோம். மதசார்பின்மையை காக்க அவரவர் நம்பிக்கையில் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்துகிறோம்” என்றார்.