தமிழ்நாடு

CM MK Stalin Speech : “இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech at Dravida Model 2.0 : தமிழகத்தின் ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்க்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பேச்சு

CM MK Stalin Speech : “இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் இதயமான திருச்சி

CM MK Stalin Speech at Dravida Model 2.0 : திருச்சி மாவட்டத்தில் 2,344 கோடியில் பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்டி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பஞ்சப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு 55,000 பேருக்கு பட்டாக்களையும், ரூ.830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் நேருவை பாராட்டுவது என்னை பாராட்டுவது போல் தான். தீரர்களின் கோட்டமாம் திருச்சியின் தலைமை தீரர் நேரு.அவர் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணம் தான் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம்.

பேருந்து முனையத்தை சுற்றிப்பார்க்கும் போது இது பஞ்சப்பூர் அல்ல எல்லா ஊரையும் மிஞ்சும் மிஞ்சப்பூர் என தான் தோன்றியது.ஏ.சி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் விமான நிலையத்திற்கு நிகராக இந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் இதயமான திருச்சிக்கு இது தேவை தான். இதை நேரு பார்த்து பார்த்து கட்டியுள்ளார்.

என் கனவை மகேஷ் நிறைவேற்றினார்

அமைச்சர் அன்பில் மகேஷ் நம்முடைய தம்பி அவரும் சாதாரணமானவர் அல்ல. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பல சாதனைகளை செய்து வருகிறார்.
நான் டெல்லிக்கு சென்றபோது அங்குள்ள மாதிரி பள்ளிகளை கண்டேன். அதை தமிழகத்தில் கொண்டு வர நினைத்தேன். என் கனவை மகேஷ் நிறைவேற்றியுள்ளார். மாதிரி பள்ளியில் படித்த மாணவர்கள் சிறந்த முறையில் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

நேருவும், அன்பில் மகேஷ் இருவரும் தங்களுடைய துறைகளில் நல்ல score செய்து அரசுக்கு நல்ல பெயர் வாங்கி தந்துள்ளார்கள். தந்தை பெரியார் ஈரோட்டில் பிறந்தாலும் அவர் வாழ்ந்தது திருச்சியில் தான். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருச்சியிலிருந்து தொடங்கியது.கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நம் திராவிட இயக்க தலைவர்கள் தான் காரணம். அவர்கள் சிலை அமைப்பது நம் கடமை மட்டுமல்ல அவர்களுக்கு நாம் செய்யும் சிறு நன்றி கடன். ரூ.408 கோடியில் பேருந்து முனையம், ரூ.128 கோடியில் சரக்கு வாகன முனையம், ரூ.236 கோடியில் தந்தை பெரியார் காய்கறி சந்தைக்கு அடிக்கல், 290 கோடியில் காமராஜர் பெயரில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இது தவிர பறவைகள் பூங்கா, ஜல்லிக்கட்டு அரங்கம், மணப்பாறை சிப்காட், ஒலிம்பிக் அகாடமி, டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

எனக்கே மலைப்பாக உள்ளது

ரூ.26066 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருச்சிக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை 4,42,0126 பேர் வாங்குகிறார்கள், 34,074 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயன் பெறுகிறார்கள், தமிழ் புதல்வன் திட்டத்தில் 16955 மாணவர்கள் பயன்பெறுகிறார்கழ், 86000 குழந்தைகள் காலை உணவு திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 4000 கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 3597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தான் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நான்காண்டு நிறைவில் செய்த சாதனைகளை பார்க்கும் போது எனக்கே மலைப்பாக இருந்தது.மதுரையில் ஒத்த செங்கல் எய்ம்ஸ் போல் இல்லாமல் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இனி சிங்கப்பாதை

திராவிட மாடல் அரசு அமைய தொடக்கம் இந்த திருச்சியில் இருந்து தான் தொடங்கியது. அப்போது நடந்த விடியலுக்கான முழக்க மாநாட்டில் ஏழு வாக்குறுதிகளை அளித்தேன்.இதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்.இது இந்தியாவில் முதல் மாநிலம் நாம் தான்.திட்டங்களை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் சமூக நீதி அரசை உருவாக்கி உள்ளோம். எல்லாருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்ந்து வருகிறது.

வரும் காலங்களில் இதை விட பெரிய சாதனைகள் படைப்போம். இதை தான் நம் எதிரிகளால் தாங்க முடியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவை அதிமுக தெரிவித்தது, ஜி.எஸ்.டிக்கு தலையாட்டினார்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் தான் அதிமுக ஆட்சியில் நடந்தது.இருண்ட கால அதிமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு தி.மு.க விடியலை தந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பல சாதனைகள் புரிந்துள்ளோம். திராவிட மாடல் 2.0 இனி தான் Loading. இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும், ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்க்கலாம்.உங்களுக்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்றார்.

ராணுவ வீரர்களுக்கு மரியாதை

இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீர வணக்கம் செல்லுமாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து ஒரு நிமிடம் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.