அரசியல்

'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்'- இபிஎஸ்-ஐ கிண்டலடித்த அமைச்சர் சேகர்பாபு!

'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்பதற்குப் பதிலாக 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்' என்று எடுத்துக்கொள்ளலாம்" என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்'- இபிஎஸ்-ஐ கிண்டலடித்த அமைச்சர் சேகர்பாபு!
Minister Sekarbabu and Edappadi Palaniswami
திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

நவம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்

திருவள்ளுர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இன்று (செப்.2) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்கள். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்த பேருந்து முனையத்திலிருந்து சென்னை மாநகரப் பேருந்துகள், எஸ்.இ.டி.சி., கர்நாடக பேருந்துகள் மற்றும் பிற அண்டை மாநில பேருந்துகள் இயக்கப்பட உள்ளன" என்றார்.

"தினசரி 30,000 பயணிகளும், விடுமுறை நாட்களில் 40,000 பயணிகளும், திருவிழாக் காலங்களில் 50,000 பயணிகளும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து முனையத்தை வருகிற நவம்பர் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்படவுள்ளது" என தெரிவித்தார். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, அடிப்படை வசதிகள் சீராக அமைக்கப்பட்டுள்ளதாகவும், குத்தம்பாக்கத்திற்கு தனியாக ஒரு காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

"தோல்வி பயத்தில் இ.பி.எஸ். சுற்றுப்பயணம்"

இதைத்தொடர்ந்து, அவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, 'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சார பயணம், தோல்வி பயத்தையே காட்டுகிறது. அந்தப் பயணத்தால் எந்தவித எழுச்சியும் இல்லை, ஒரு பலனும் இல்லை" என்று விமர்சித்தார்.

மேலும், "இது 'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்பதற்குப் பதிலாக 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்' என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்" என்றும் அமைச்சர் சேகர்பாபு கிண்டலாகத் தெரிவித்தார்.