அரசியல்

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Minister Sekarbabu Slams Edappadi Palaniswami Over HR&CE Education Initiatives
சென்னை புளியந்தோப்பில் "அண்ணன் தரும் அமுத கரங்கள்" நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது துறை மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அண்மையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாகவும் விளக்கமளித்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு-

அண்ணன் தரும் அமுத கரங்கள்:

"அண்ணன் தரும் அமுத கரங்கள்" நிகழ்ச்சி 141-வது நாளாக 1200 பேருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கியுள்ளது என்றும், எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த நிகழ்ச்சி ஓராண்டை நிச்சயமாக நிறைவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அன்னதானத் திட்டங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், சுமார் 132 கோடி ரூபாய் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வரும் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 22,450 மாணவர்களுக்குத் தேவையான புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

அறநிலையத்துறை கல்லூரிகள்- எடப்பாடியின் விமர்சனத்திற்கு பதில்:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல தடைகளையும் நீதிமன்றப் போராட்டங்களையும் தாண்டி நான்கு கல்லூரிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அந்தக் கல்லூரிகளில் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சரித்திரத்தில் இடம்பெறும் அளவிற்கு அதிமேதாவித்தனமாகப் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட சேகர்பாபு, இந்தக் கல்லூரிகள் அரசு சார்பில் துவங்கப்பட வேண்டியவை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த ஆட்சியில் 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் துவங்கியுள்ளதாகவும், அறநிலையத்துறை மூலம் அறப்பணி, கல்விப்பணி இரண்டையும் செழுமையாக நடத்தி வருவதாகவும் அவர் விளக்கினார்.

வரலாற்று ஆதாரங்களும் எதிர்க்கட்சியின் முரண்பாடும்:

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கூற்றுப்படி பார்த்தால், 1966 ஆம் ஆண்டு சென்னை மாகாண அட்வகேட் ஜெனரல் சி.பி.ராமசாமி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது என்றும், அந்தக் குழு 1962 ஆம் ஆண்டே கல்வி நிலையங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது என்றும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்.

சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கல்விச்சோலை இருந்ததாகவும், 11 பாடப்பிரிவுகள் இடம்பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுகள் கூறுவதையும் அவர் நினைவுபடுத்தினார். வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி நிலையங்களும் மருத்துவ நிலையங்களும் மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்ததற்குப் பல சான்றுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கோயில் கட்டிடங்களைப் போன்ற பிரிவுகளை உள்ளடக்கி கல்லூரிகளைத் தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமே சொல்வதாகவும், அந்த வகையில்தான் இந்த ஆட்சியில் நான்கு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இதுபோன்று கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமியின் இரட்டை வேடம்:

இந்த ஆட்சியைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், புதியதாகச் சேர்ந்திருக்கும் 'சங்கிகளின் கூடாரம்' மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் பல முரணான வார்த்தைகளைப் பேசியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.

கோவையில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது தனது மாவட்டத்திலுள்ள மருதமலை திருக்கோயில் சார்ந்த இடத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததை அமைச்சர் நினைவுபடுத்தினார். கோயில் நிதியில் இருந்து கல்விக்கூடங்களை நடத்தலாமா? என்று கேட்கும் எடப்பாடி பழனிசாமி, 2014 ஆம் ஆண்டு பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களைத் திறந்து வைத்தார் என்றும், கடந்த ஆட்சிக்காலங்களிலேயே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எண்ணற்ற பள்ளிகளும் கல்லூரிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டினார்.

"வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என பாஜகவுக்கு ஊதுகோலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது. தகுந்த பாடத்தை மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பரிசாக அளிப்பார்கள்," என்றார் சேகர்பாபு.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்ட கல்வி கட்டிடங்கள் அனைத்தும் அறநிலையத்துறையின் வருமானத்திலிருந்து கட்டப்பட்டதுதான் என்றும், அது அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது அல்ல என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அறியாமையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் 'சங்கிகள் கூட்டம்' எழுதிக் கொடுப்பதைப் அப்படியே வாசித்து வருகிறார் என்றும் அமைச்சர் சேகர்பாபு சாடினார்.