அரசியல்

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

காலியிடங்களின் எண்ணிக்கை உயர்வு:

முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60 க்கும் அதிகமாகி விட்டன. கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

கல்லூரிகளில் முதலவா பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்பாமல் அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

9000-க்கும் கூடுதலான காலி பணியிடங்கள்:

ஒருபுறம் தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10,500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000-க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. இத்தகைய சூழலில் முதல்வர்களும் இல்லை என்றால் அரசு கல்லூரிகளில் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்கும். கல்வி இருக்காது. விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு இந்த அடிப்படை உண்மை கூட தெரியவில்லை.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 4000 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்ட பிறகும் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அக்கறையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இல்லை.

யாருக்கும் பயனில்லாத அரசு:

அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.38.40 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.4.60 கோடி வரை கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப் படவில்லை. இரு ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்களை நியமிக்கவில்லை. அப்படியானால் தமிழகத்தில் யாருக்கும் பயனில்லாத இப்படி ஓர் அரசு எதற்காக தொடர வேண்டும் என்ற வினா தான் எழுகிறது.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்:

உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 9000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.