அரசியல்

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Edappadi Palaniswami
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.

உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

இது சாதாரண தீ விபத்து அல்ல, டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.