அரசியல்

திருநெல்வேலி To சாத்தூர்: தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி To சாத்தூர்: தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran
தமிழகப் பாஜக தலைவரும், தற்போதைய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தொகுதிப் பட்டியலில், நயினார் நாகேந்திரன் கடந்த முறை வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதி இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அந்தத் தொகுதி அதிமுகவின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளது. இந்நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியில் விளக்கம்

கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "நான் சாத்தூர் தொகுதியில் களம் காண்கிறேன். எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜகவின் மற்றொரு முக்கியத் தலைவரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மாறிய தொகுதிப் பின்னணி

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் சுமார் 92,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருந்தார். தற்போது கூட்டணி ஒப்பந்தத்தின்படி திருநெல்வேலி தொகுதி கைமாறியுள்ளதால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயிலாப்பூர், நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.