அரசியல்

"மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்"- முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.


Thirumavalavan
"மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் எனவும் தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவிலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும்.

மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும், கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம்.

கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம்.

2017-ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம்.

நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும்,அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும், கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும்.

இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம்.

அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும்.

அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும்.

கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது.

தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன.

கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும்.

கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும்.

கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது.

கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட , நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும்.

அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும்.

தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.

தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.

இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது கமல்ஹாசனும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்'கொண்ட கமல்ஹாசன், 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.

தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்’" எனத் தெரிவித்துள்ளார்.