அரசியல்

‘முதல்வருக்கும் எனக்கும் சண்டை..’ வேல்முருகன் பரபரப்பு பேச்சு!

“முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது” வேல்முருகன் கூறினார்.

‘முதல்வருக்கும் எனக்கும் சண்டை..’ வேல்முருகன் பரபரப்பு பேச்சு!
Velmurugan and CM Stalin
“முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது” தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற "முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு

இந்தக் கூட்டத்தில் பேசிய வேல்முருகன், "தமிழ்நாடு எவ்வளவு பெரிய இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது என்பது எனக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தெரியும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை யார் நம் மீது திணிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் ஏற்ற அரசாக மத்திய பாஜக அரசு ஒரு மாநிலத்தின் முற்றதிகாரத்தையே தனதாக்கிக்கொண்டு, ஒரு ‘காட்டு தர்பார்’ அரசை நடத்தி வருகிறது.

சர்வாதிகார ஆட்சிக்குத் தயாராகிவிட்ட பிரதமர் மோடியை கண்டிப்பதற்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தயாராக இல்லை. யாராவது நீதிபதிகள் பேசினால், உச்ச நீதிமன்ற நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்று 'சங்கிகள்' அவர்களைக் கையில் எடுக்கின்றனர். இவ்வாறான பெரும்பான்மையான விஷயங்களை நான் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.

‘முதல்வருக்கும் எனக்கும் சண்டை..’

மாநில அரசின் அதிகாரம் குறித்துப் பேசிய வேல்முருகன், "பாவம் நமது முதல்வர், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் அங்கே சட்டமன்றங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த சூழ்நிலையில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மாநில அரசின் பதவிகள் 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்” என்று வெளியுறுத்தினார்.

மேலும், "டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்கி இருக்கிறது. இதில் 5,000 ஆண்கள், 5,000 பெண்கள் உள்ளனர். இது குறித்து சட்டமன்றத்தில் நான் கேட்டேன். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அதை இதுவரை கண்டுகொள்ளவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் திமுக அமைச்சர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு முதல்வரை சந்தித்த வேல்முருகன் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விளக்குகிறாரா? என்ற கேள்விக்கு எழுந்த நிலையில், “இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தொடர்கிறேன்” என்று பதிலளித்த வேல்முருகன், “வரும் சட்டசபை தேர்தலில் அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.