அரசியல்

கரூர் விவகாரம்.. மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

கரூர் விவகாரம்.. மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்- செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
Selvaperunthagai
கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், இந்தச் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கருத்துகளுக்குக் பதிலடி கொடுத்தார்.

நிவாரணப் பணிகளில் காங்கிரஸின் பங்களிப்பு

பாதிக்கப்பட்டோருக்கான ஆறுதல் மற்றும் நிவாரணப் பணிகளைப் பற்றிப் பேசிய செல்வப்பெருந்தகை, "இன்று மீண்டும் கரூர் செல்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம். டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுனா கார்கேவும் சிறப்புப் பிரதிநிதிகளை அனுப்பி உள்ளார்கள்," என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை குறித்துப் பாராட்டு

விசாரணை ஆணையம் குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கையைப் பாராட்டினார். "முதலமைச்சர் ஸ்டாலின் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். நேர்மையாக விசாரிக்கக் கூடிய நீதி அரசரை முதலமைச்சரை நியமித்திருக்கிறார். முதலமைச்சர் கரூர் விஷயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நிவாரணம், ஆணையம் அமைத்தது, பல மாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து இன்னும் உயிர்ச்சேதங்கள் இல்லாமல் தடுத்து இருப்பது பாராட்டிற்குரிய விஷயம்" என்று அவர் குறிப்பிட்டார். விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்தது குறித்த கேள்விக்கு, "அது அவருடைய விருப்பம். அதைப்பற்றி நாம் என்ன கூற முடியும்?" என்று பதிலளித்தார்.

மலிவான அரசியல் கூடாது

கரூர் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அண்ணாமலை கருத்து தெரிவித்திருப்பது குறித்தும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று பழனிசாமி கூறியது குறித்தும் அவர் காரசாரமாகப் பதிலளித்தார். "பிணத்தின் மீது அரசியல் செய்பவர்கள் இதுபோன்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த அரசியல் அநாகரிகமான அரசியல். 40 பேர் உயிரிழந்துள்ளனர், அப்படி இருக்கும்பொழுது இது போன்ற எண்ணங்கள் வருமா? விசாரணை ஆணையம் உள்ளது, உண்மை எல்லாம் வெளியில் வரும். விசாரணை முடியட்டும், அதன் பிறகு நாம் பேசுவோம். எடுத்தோம் கவுத்தோம் என்று அரசியல் தலையீடு என்று பேச வேண்டாம்" என்று அவர் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிசாமி இதே அருணா ஜெகதீசன் அவர்களைத் தான் நியமித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "அப்பொழுது நீதி கிடைக்காது என்று அவர்கள் நியமித்தார்களா? இதனை முதலில் அதிமுக கூட்டணியில் இருப்பவர்களைக் கேட்கச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பதிலளிக்கிறேன்" என்று கேள்வி எழுப்பினார். விஜய்யும் நிர்வாகிகளும் கரூர் சென்று பார்க்காதது குறித்தான கேள்விக்கு, "மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனப் பதிலளித்துவிட்டு, மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.