தமிழ்நாடு

கரூர் பெருந்துயரம்.. புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. புதிய விசாரணை அதிகாரி நியமனம்!
New investigating officer appointed
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்ததை அடுத்து, இந்த வழக்கு விசாரணை அதிகாரியாகக் கரூர் போலீஸ் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிகாரி நியமனம்

கடந்த 27 (சனிக்கிழமை) இரவு விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணையை மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று (செப்.28) கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஎஸ்பி அந்தஸ்துக்கு உயர் பொறுப்புக் கொண்ட ஏடிஎஸ்பி பிரேமானந்தன் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை முதல் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை

இதேவேளையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், கரூரில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, பலியானவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.