அரசியல்

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!

“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!
Tamilisai Soundararajan
சென்னையை அடுத்த மூவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பல்வேறு கருத்துகளைக் காரசாரமாகத் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி- முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது தவறு

விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மக்களை இணைக்கும் விழாக்களாக அமைந்துள்ளன என்று கூறிய தமிழிசை, "இந்த விழாவை மதம் சார்ந்தது என்று சிலர் கூறுவார்கள். ஆனால், இந்த விழாக்களில் கலைகள் வளர்க்கப்படுகின்றன. மேலும், அன்னதானம், கண் தானம், ரத்த தானம் எனப் பல்வேறு நலப்பணிகளும் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஆன்மிகம் தான் வளர்ந்து ஓங்கும். விநாயகர் சதுர்த்திக்கு வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால், நமது முதலமைச்சர் மட்டும் வாழ்த்து சொல்லாதது தவறு, அது மன்னிக்க முடியாத குற்றம். மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்போது, அதனை முதலமைச்சர் மதிக்க வேண்டும்," என்று ஆவேசமாகப் பேசினார்.

'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் ஆற்றில் வீச்சு

தமிழ்நாடு மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத போதும், பல பிரச்சினைகள் உள்ள போதும் முதலமைச்சர் பீகாருக்குச் சென்றுவிட்டதாக அவர் விமர்சித்தார். மேலும், "'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் வாங்கிய மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் மிதக்கின்றன. 'தவளையுடன் ஸ்டாலின்', 'மீன்களுடன் ஸ்டாலின்' என்று புதிய பெயர்களுடன் திட்டங்களை ஆரம்பித்துள்ளாரோ எனத் தெரியவில்லை. பெயர் அளவில் திட்டங்களைச் செய்துவிட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை," என்று அவர் கடுமையாகச் சாடினார்.

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்து பேசிய அவர், "தீர்வு காணப்பட்ட மனுக்களை ஆற்றில் வீச முடியுமா? அப்படியானால், தீர்வு காணப்படாமல் நிறைய மனுக்கள் இருக்கின்றனவா? விநாயகரை ஆற்றில் கரைப்போம். ஆனால், அவர்கள் மக்களின் மனுக்களைக் கரைக்கின்றனர். புதிய பெயர்களை வைத்து விழா நடத்துவார்கள். ஆனால், மக்கள் பற்றி கவலைப்பட மாட்டார்கள்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.

அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெரும்

தமிழகத்தில் எதிர்க்கட்சி கூட்டணி பலமாகி வருகிறது என்று கூறிய தமிழிசை, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிதான் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், ரூ.15 ஆயிரம் கோடி செலவில் சென்னை-பெங்களூரு அதிவேக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் 7 வழித்தடங்களில் செல்கின்றன. பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு எல்லா நலன்களையும் செய்து வருகிறார். இனியும் யாரும் ஒன்றும் செய்யவில்லை என்ற விமர்சனம் எடுபடாது," என்றார்.

பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வர வாய்ப்புகள் இருப்பதாகவும், 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற அவர் உறுதுணையாக இருப்பார் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

‘விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது..’

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேட்டபோது, "அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், போட்டி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான். அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம். விஜய் புதிய சிந்தனையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டு கட்சி நடத்துகிறார். புதிய சிந்தனை இல்லாமல் புதிய கட்சி எதற்கு எனத் தெரியவில்லை.

தவெக மாநாட்டில் 'பவுன்சர் தூக்கிப் வீசிய நபர் யார்?' என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. ஒருவரால் ஒரு பவுன்சர் தூக்கிப் போட்டவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவரால் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அவரால் கலாட்டா, சலசலப்புதான் செய்ய முடியும். விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது," என்று விமர்சனம் செய்தார்.