விளையாட்டு

விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி!
Aus vs Zim
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இன்று கொலம்போவில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தி விடலாம் என்ற ஆஸ்திரேலியாவின் கணக்கு, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களின் நிதானமான ஆட்டத்தால் தவிடுபொடியானது.

ஜிம்பாப்வேவின் சிறப்பான பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை மிகவும் கவனமாகக் கையாண்டது. குறிப்பாக, தொடக்க வீரர் ப்ரியன் நங்கூரமிட்டு விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

சரிந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வரிசை

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஜோஸ் இங்கிலிஸ் 8 ரன்களில் வெளியேற, பின்வரிசையில் வந்த கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி ஏமாற்றினர். நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா கடும் சரிவைச் சந்தித்தது.

மிரட்டிய முசரபானி - ஜிம்பாப்வே வெற்றி

நடுவரிசையில் மேக்ஸ்வெல் (31 ரன்கள்) மற்றும் மேட் ரென்ஷா ஜோடி இணைந்து அணியை மீட்கப் போராடியது. அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரைசதம் (65 ரன்கள்) கடந்து நம்பிக்கை அளித்த போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் முசரபானி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால் ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றுள்ளது.