கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் வெள்ளம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. திருவண்ணாமலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திடீரென ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து அந்த பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி இந்த குழுவினர் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பிறகு மத்தியக் குழுவினர் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க உள்ளனர்.
இக்குழு நேற்று விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் உள்ள பகுதியில் இறங்கி பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் வெள்ளபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் மத்தியக்குழுவினர் இன்று கடலூர், பண்ருட்டி தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், புதுச்சேரி மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் வெள்ள சேதங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மத்தியக்குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றனர்.
தொடர்ந்து இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களான பகண்டை, மேல்பட்டாம்பாக்கம், அழகிய நத்தம், குண்டு உப்பலவாடி, நாணமேடு,கண்டக்காடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள சேதம், பாலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பயிர்கள் பாதிப்பு ஆகியவற்றை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மத்திய அரசு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள சுமார் 945 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக தமிழக அரசுக்கு 944.80 கோடி ரூபாய் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.