தமிழ்நாடு

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது
சென்னையில் 13 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் கைது
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் ( மண்டலம் 5 மற்றும் 6) தூய்மைப்பணிகள் தனியார் நிறுவனம்மூலம் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

13 நாளாக தொடர் போராட்டம்

இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1ம் தேதி முதல் ரிப்பன் மாளிகை கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் சூழல் மற்றும் குறைந்த ஊதியம் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆகையால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் 13 நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக, விசிக, தவெக, பாஜக, சிபிஎம், நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களைத் தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக உறுதி அளித்தார்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதேப்போல் பல்வேறு திரைப்பட நடிகர்கள், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே அனுமதிக்கபடாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு நேற்று மாலை முதலே போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் போராட்டத்தைத் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் எனக் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் 8ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து பேசிய போராட்டக்குழுவினர், இனி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தான் பங்கேற்போம் எனத் தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து 13 நாளாகத் தொடர் போரடடத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.அப்போது தூய்மை பணியாளர்கள் தேசியக்கொடி மற்றும் கம்யூனிஸ்ட் கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.அப்போது பெண்கள் சிலர் மயக்கம் அடைந்தனர்.அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது பேருந்திலிருந்து இறங்கி வேளச்சேரி 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் தாக்குதல்

மேலும், கைது செய்து அழைத்த செல்லப்பட்ட தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினரை பேருந்தில் வைத்தே தாக்கியதாகக் காவலர்கள்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இடத்தில் இருந்த குப்பைகளைத் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றினர். போராட்டம் நடந்த இடத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது. இதனால் அங்குப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.